மகளிர் காங்கிரஸ் விழாவில் கே.ஆர்.விஜயா, மீனா, ஜெயசித்ராவுக்கு இந்திரா விருது வழங்க முடிவு!!

தமிழக மகளிர் காங்கிரசில் மாநில தலைவர் ஜான்சி ராணி தலைமையில் ஒரு கோஷ்டியும், மூத்த தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்படுகிறது.

ஜான்சிராணி ஆதரவாளர்கள் வருகிற 13-ந்தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் மகளிர் தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ராணி ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.

இந்த விழாவில் பங்கேற்கும்படி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் பொது செயலாளர் நக்மா, மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா ஓஜா ஆகியோருக்கு ஜான்சி ராணி அழைப்பு விடுத்துள்ளார்.

யசோதா ஆதரவாளர்கள் 19-ந்தேதி கடலூரில் மகளிர் தின விழா நடத்துகிறார்கள். இதில் பங்கேற்க புதுவை முதல்வர் நாராயணசாமி, முகுல்வாஸ்னிக், ஷோபா ஓஜா, நக்மா, திருநாவுக்கரசர் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.


ஜெயசித்ரா

யசோதா தலைமையில் நடைபெறும் விழாவில் நடிகைகள் கே.ஆர். விஜயா, ஜெயசித்ரா, மீனா ஆகியோருக்கு இந்திரா விருது வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் டெல்லி மேலிடம் நடிகைகளுக்கு இந்திரா விருது வழங்குவதை விரும்பவில்லை.

அதேபோல் மீனாவும், நக்மாவும் சமகால நடிகைகள். இதில் மீனாவுக்கு மட்டும் விருது வழங்கப்படுவதை நக்மா விரும்பவில்லை. எனவே யசோதா நடத்தும் நிகழ்ச்சியில் நக்மாவும், ஷோபா ஓஜாவும் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஜான்சிராணி கூறும் போது, இந்த இரு நிகழ்ச்சிகளும் மகளிர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் அல்ல. சுய உதவி குழுக்கள் நடத்தும் நிகழ்ச்சிகள். மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.