பிலிப்பைன்சில் ஜெர்மனி பிணைக்கைதி தலையை துண்டித்து படுகொலை!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘அபுசயாப்’ என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பிலிப்பைன்சின் தென்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

சமீப காலமாக இவர்கள் பிலிப்பைன்ஸ்- மலேசியா இடையே படகுகளை கடத்துதல், மீன்பிடி படகுகளை வழிமறித்து அதில் இருப்பவர்களை கடத்தி சென்று பிணைத் தொகை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஜர்ஜென் கான்ட்னெர் (70) என்பவர் அபுசாயப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இவரை விடுவிக்க ஜெர்மனி அரசிடம் தீவிரவாதிகள் பிணைத் தொகை கேட்டனர்.

அதை தர ஜெர்மனி மறுத்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் கான்ட்னரை தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.

அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தனர். ஆனால் கொலை செய்யப்பட்ட கான்ட்னரின் உடல் கிடைக்கவில்லை.

எனவே, அதை ராணுவத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் உடல் பிலிப்பைன்சில் சுலுதீவில் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது.

கான்ட்னெர் கடந்த நவம்பர் மாதம் கடத்தப்பட்டு சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2008-ம் ஆண்டு கான்ட்னெரும், அவரது காதலியும் சோமாலியா கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டு 52 நாட்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். பிணைத்தொகை பெற்ற பிறகு அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.