டி.ஆர்.எஸ்.-ஐ சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்: கங்குலி வலியுறுத்தல்

இந்திய அணி புனே டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. டி.ஆர்.எஸ். முறையையும் சரியாக பயன்படுத்தவில்லை. எனவே நாளை தொடங்க உள்ள 2-வது டெஸ்டில் இந்தியா டி.ஆர்.எஸ். முறையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘இந்தியா கடந்த 10 ஆண்டுகள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் மீண்டும் அதே நிலைமையை அடைய கடினமாக விளையாட வேண்டும். இந்திய அணி சொந்த மண்ணில் தோற்றதை போல், ஏராளமான அணிகளும் தோல்வியை சந்தித்துள்ளன. இது முதல் முறையை அல்ல. அனைத்து வகையில் சிறந்த முறையில் செயல்பட சிறிது ஓய்வு தேவை. பெங்களூரில் மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்பும்.

இந்திய அணி கவலைப்பட தேவையில்லை. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் நீண்ட தொடர். அஸ்வின் மற்றும் ஜடேஜா சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள். புனேவில் உமேஷ் யாதவ் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். டெஸ்ட் போட்டியில் நான் பார்த்ததில் அவருடைய சிறந்த பந்து வீச்சு. நாம் ஒரு சிறந்த அணி என்பதை இந்தியா நம்ப வேண்டும். இந்திய அணி டி.ஆர்.எஸ். முறையை இன்னும் சிறப்பான முறையில் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

விராட் கோலியும் ஒரு மனிதர்தான். ஒருநாள் அவரும் சொதப்புவார். புனே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் அவர் ஜொலிக்கவில்லை. முதல் இன்னிங்சில் வெளியே சென்ற தேவையில்லாத பந்தை அடித்து அவுட்டானார். ஆனால் 2-வது இன்னிங்சில் அவரை க்ளீன் போல்டாக்கினார்கள். 441 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர். இந்த முன்னிலை வைத்ததுமே இந்தியாவின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்து விட்டது.

புனே டெஸ்டிற்குப் பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்தவொரு விஷயத்தையும் அவர் மறைக்க முயற்சி செய்யவில்லை’’ என்றார்.