யாழ்.பல்கலை மாணவர்களை அச்சுறுத்திய வாள்வெட்டுக் குழு: எங்களுக்கு ஆவா குழுவை தெரியும் என மிரட்டல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை வாள்வெட்டுக்குழு ஒன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இன்றைய தினம் இராமநாதன் வீதியில் இருந்து பல்கலைக்கழக நுழைவாசலுக்கு வந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்த மாணவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கிடையில் சிறு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதோடு, அவர்களுக்கிடையில் சச்சரவும் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், முரண்பாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர், தனக்குத் தெரிந்த வாள்வெட்டுக் குழுவினரை அழைத்துள்ளார்.

குறித்த மாணவன் மதுபோதையில் இருந்ததாகவும், இந்நிலையில் தனது சாகாக்கள் நால்வரை அழைத்துக்கொண்டு யாழ்.பல்கலைகழகத்தின் முகப்புக்கு வந்துள்ளார்.

வாள் வெட்டுக் குழுவினரோடு வந்த அவர், அங்கு வைத்து தம்மோடு முரண்பட்டுக்கொண்ட எனைய மாணவர்களுக்கு கூரிய வாள் போன்றவற்றை காட்டியும், தமக்கு ஆவா குழுவை தெரியும் என கூறியும் அம் மாணவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

எனினும் அவ்விடத்தில் அதிகளவான பல்கலைக்கழக மாணவர்கள் குவிந்தனர். இதனையடுத்து, குறித்த ஆயுதம் தாங்கியிருந்த குழு அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரியவருகிறது.

இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பல்கலைகழக சமூகம் முறைப்பாடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.