தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹையிடம், அவரது தோழி சோய் சூன் சில்லுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர், இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தனது தொண்டு அமைப்புகளுக்கு நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றார். இதில் அதிபரின் பங்களிப்பும் சந்தேகத்துக்கு இடமாகி இருக்கிறது. அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது குழும நிறுவனத்துக்கு அரசிடம் சில ஆதாயங்களைப் பெறும் வகையில், சோய் சூன் சில்லுக்கு சாம்சங் குழுமத்தின் அதிபர் லீ குன் ஹீயின் மகனும், துணைத்தலைவருமான லீ ஜே யாங் 4 கோடி டாலர் (சுமார் ரூ.268 கோடி) லஞ்சம் அளித்தது உள்பட பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கினார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் அவர் மீது கோர்ட்டில் அரசு சிறப்பு வக்கீல்கள் முறைப்படி நேற்று லஞ்சம், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.
மேலும், சாம்சங் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் 4 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக லீ ஜே யாங் உள்ளிட்ட 5 பேரும் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.