என்னை கொலை செய்ய முயற்சி! மேலதிக பாதுகாப்பு வழங்குங்கள்! கதறும் கருணா

முன்னாள் போராளிகள் தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் சிலர் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.

அண்மையில் இவ்வாறு முயற்சி மேற்கொண்ட புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர். எனவே எனது பாதுகாப்பிற்கு மேலும் சில பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது பொருத்தமானது.

அண்மையில் மட்டக்களப்பில் என்னைக் கொலை செய்ய முயற்சித்த முன்னாள் போராளி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்.

அது மட்டுமல்ல என்னைக் கொலை செய்ய இன்னும் சில முன்னாள் போராளிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நான் இந்த நாட்களில் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றேன்.

எனது பாதுகாப்பிற்கு நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. குறைந்தபட்சம் இன்னும் மூன்று நான்கு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட வேண்டும்.

எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோருகின்றேன்.

நான் தவறுகளில் ஈடுபடுவதில்லை. எனக்கு மக்களுக்கு சேவையாற்றும் நோக்கம் மட்டுமே உண்டு.

அவர்கள் சிங்களவர்களா? முஸ்லிம்களா? தமிழர்களா? என நான் பார்ப்பதில்லை. அனைவருக்கும் சேவையாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என கருணா தெரிவித்துள்ளார்.