முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அவசியம் இல்லை என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது.
அண்மையில் மஹிந்த ராஜபக்ச, மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். இதன்போது அவருக்கு உதவியாக சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த லொக்குபண்டார, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தொடர்புக்கொள்ள முயற்சித்தபோது அது பலனிக்கவில்லை.
இந்தநிலையில் வெளியுறவு அமைச்சருக்கான தகவல் வைக்கப்பட்டு அந்த தகவலின் அடிப்படையில் மங்கள சமரவீர, உதித்த லொக்குபண்டாரவுடன் தொடர்புகொண்டார்.
இதன்போது சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட பாதுகாப்பை கோருவதாக உதித்த, மங்களவிடம் தெரிவித்தார்.
வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் மலேசியாவில் கொல்லப்பட்டமையை அடுத்தே இந்தக்கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் மங்களவிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மங்கள சமரவீர, சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் காசிவிஸ்வநாதன் சண்முகத்தை தொடர்புக்கொண்டு மஹிந்தவின் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து சில நிமிட நேரங்களில் மங்களவுடன் தொடர்பை ஏற்படுத்திய சண்முகம், சிங்கப்பூரில் ஏற்கனவே புலனாய்வுத்துறையினர் தமது அதிகப்பட்ச கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
எனவே மஹிந்த கோரும் அளவுக்கு அவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அவசியம் இல்லை என்று சண்முகம் குறிப்பிட்டதாக ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.