எப்படி பேட் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக ஆடிவிட்டோம்: கோலி புலம்பல்

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இரண்டு இன்னிங்சிலும் எங்களது பேட்டிங் சொதப்பி விட்டது. எங்களது திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை. இது போன்ற ஆடுகளங்களில் எப்படி பேட்டிங் செய்யக்கூடாது என்பதற்கு எங்களது ஆட்டத்தை உதாரணமாக சொல்லலாம்.

சில மாதங்களாக நாங்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் நான்கைந்து வீரர்கள் ஒரே மாதிரியாக தவறாக கணித்து ஆட்டம் இழந்தது அரிதாக நடக்கக்கூடிய ஒன்றே. கடந்த 2 ஆண்டுகளில் எங்களது மோசமான பேட்டிங் இது தான். குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு (ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்) எதிராக மட்டும் 5 கேட்சுகளை நழுவ விட்டோம் என்றால், பிறகு வெற்றிக்கு நாம் தகுதியான அணியாகவே இருக்க முடியாது. பந்து வீச்சாளர்களை குறைசொல்ல மாட்டேன். தோல்விக்கு பேட்ஸ்மேன்களே முழு காரணம். இது போன்று மிகப்பெரிய முன்னிலையை கொடுத்து விட்டு சரிவில் இருந்து மீள்வது உண்மையிலேயே கடினமானது.

என்ன தவறு செய்தோம் என்பதை பார்க்க வேண்டும். ஆடுகளத்தன்மையை எங்களை விட ஆஸ்திரேலியா நன்றாக பயன்படுத்திக்கொண்டது. போட்டி முழுவதும் எங்களை நெருக்கடிக்குள்ளாக்கிய ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணி. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று, முன்னேற்றம் கண்டு, அடுத்த போட்டியில் வலுவான அணியாக மீண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். அடுத்த டெஸ்டில் முதல் பந்தில் இருந்தே ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு கோலி கூறினார்.