ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடத்த நான் உத்தரவிடவில்லை: பன்னீர்செல்வம் பகீர்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த நான் உத்தரவிடவில்லை என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

டிவி சேனல் பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தானாக மக்கள் எழுச்சியடைந்தனர். அது செயற்கையானது இல்லை. அதேபோலத்தான் இப்போதுள்ள அரசியல் சூழலுக்கு எதிராகவும் மக்கள் கிளர்ச்சி செய்ய தயாராக உள்ளனர்.

பொதுமக்கள் நடத்திய நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. திரும்பவும் மெரினாவில் மக்கள் கூட தேவையில்லாத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நான்பேசுகையில், சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் கொடுப்பார் என்ற தகவலை மெரினா போராட்டக்காரர்களிடம் தெரிவிக்குமாறு கூறினேன். ஆனால் அங்கு நிலைமை மாறிவிட்டது.

இதையறிந்ததும் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இருக்கின்ற சூழ்நிலையை பொறுத்து காவல்துறை முடிவெடுத்துள்ளது. நான் என் மட்டத்தில் போலீஸ் படையை பயன்படுத்த உத்தரவிடவில்லை. போலீஸ் எடுத்த நடவடிக்கை எதிர்மறையாக சென்றுவிட்டது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். பன்னீர்செல்வத்திற்கு நல்ல பெயர் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக, தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.