தினகரனின் அடுத்தடுத்த கட்டளைகளால் கடுகடு எடப்பாடி பழனிச்சாமி?

சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் அடுத்தடுத்த கட்டளைகளால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் சசிகலாவின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் முக்கியமானவராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால்தான் ஜெயலலிதா மறைந்த உடனேயே எடப்பாடியையே முதல்வராக்க சசிகலா முயற்சித்தார்.

ஆனால் மத்திய அரசின் நெருக்கடியால் ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார். இதையடுத்து தாம் முதல்வராக ஆசைப்பட்டு ஓபிஎஸ்ஸை ராஜினாமா செய்ய வைத்தார் சசிகலா.

எடப்பாடி தேர்வு
உச்சநீதிமன்ற தீர்ப்பால் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க ஏற்பாடுகளை செய்துவிட்டு பெங்களூர் சிறைக்கு போனார் சசிகலா.

தினகரன் ஆதிக்கம்
அப்படி பெங்களூரு சிறைக்குப் போகும்போது அக்கா மகன் டிடிவி தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலராக்கினார் சசிகலா. இதை பயன்படுத்திக் கொண்டு ஆட்சியையும் கட்சியையும் ஒட்டுமொத்தமாக தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள துடியாய் துடிக்கிறார் தினகரன்.

நிழல் முதல்வராக உத்தரவு

தம்மை ஒரு நிழல் முதல்வராகவே வெளிப்படுத்தி வரும் தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அப்படி செய்யுங்கள்.. இப்படி செய்யுங்கள் என உத்தரவு போட்டு வருகிறாராம். அத்துடன் சசிகலா கணவர் நடராஜன், சசிகலா தம்பி திவாகரனின் எந்த நெருக்கடிக்கும் பணியாதீர்கள் எனவும் தூபம் போட்டாராம் தினகரன்.

கடுகடு எடப்பாடி
தினகரனின் அதீத நெருக்கடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுத்தமாகவே விரும்பவில்லை. நான் சசிகலாவுக்கு மட்டுமே விசுவாசியாக இருக்க விரும்புகிறேன்; அவங்க குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் அடிமையாக்க நினைத்தால் எப்படி சரி வரும் என கடுகடுவென அதிருப்தியை கொட்டி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.