மற்ற அணிகளை போன்றே ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்வோம்: கும்பிளே

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் ஒவ்வொரு அணியையும் மதிக்கிறோம். ஆஸ்திரேலியா எப்படிப்பட்ட அணி என்பது எங்களுக்கு தெரியும். கிரிக்கெட்டை முழுமையான தொழிலாக நினைத்து விளையாடுபவர்கள். ஆனால் அவர்களையும் மற்ற அணிகளை போலவே நினைத்து விளையாடுவோம். அது மட்டுமின்றி இந்த தொடருக்கு என்று பிரத்யேக முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. கடந்த 6-8 மாதங்களாக நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். அதையே இந்த தொடரிலும் செய்ய வேண்டும்.

ஆஸ்திரேலிய அணியில் தரமான பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிப்பார்கள் என்பதை அறிவோம். அதற்கு ஏற்ப ஒருங்கிணைந்து வியூகம் அமைத்து பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு கும்பிளே கூறினார்.