சிறைக்கம்பிக்குள் இருக்கும் விமலின் கோரிக்கை!

அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

“நான் சிறையில் இருக்கும் போது தினமும் வெளியிடப்படும் பத்திரிகைகளை எனக்கு வழங்க முடியுமா?” என விமல் நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே விமல் குறித்த கோரிக்கையை நீதிமன்றிடம் முன்வைத்துள்ளார்.

விமல் வீரவங்ச ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், நாட்டு நிலவரம் தொடர்பில் அவர் அறிந்துக்கொள்ள வேண்டும். எனவே அவருக்கு தினமும் வெளிவரும் பத்திரிகைகளை வழங்க அனுமதியளிக்குமாறு விமலின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகைகள் வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என இதற்கு பதிலளித்த கொழும்பு கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கோரிக்கையை விமல், சிறைச்சாலை திணைக்களத்தில் விடுக்கலாம் என நீதவான் கூறியுள்ளார்.

மேலும், விமலின் பாதுகாவலர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை,விமல் வீரவங்சவை மார்ச் மாதம் 6 அம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.