யாழ்ப்பாணம் செல்லும் மைத்திரி: 238 ஏக்கர் காணிகளை விடுவிப்பார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணப் பயணத்தின்போது 238 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், இறுதி நேரத்தில் அந்தப் பயணம் இடைநிறுத்தப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது பங்கெடுக் திட்டமிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார்.

இதன்போது காங்கேசன்துறை மேற்கில் மாம்பிராய் மாங்கொல் பகுதியில் 238 ஏக்கர் காணி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. வள்ளுவர் புரத்தில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளும் விடுவிக்கப்படவுள்ளன.

மேலும், மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் பலாலியில் அமைக்கப்பட்ட வீடுகள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளன.

இதனைவிட, கோட்டைப் பகுதியில் மரம் நடுகை நிகழ்விலும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜனாதிபதிக்குத் தெரிவியுங்கள்’ அலுவலகத் திறப்பு விழாவிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்கிறார்.