வெள்ளை வான் கடத்தல் முட்டாள்தனமான வேலை: ராஜித

வெள்ளை வானில் ஆட்களை கடத்திச் செல்வது முட்டாள் தனமான செயல் எனவும் அதற்கு மாறாக செய்ய வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அண்மையில் கூறியிருந்ததாகவும் அரசாங்கம் வெள்ளை வான் கொள்கையை கையாள தயாராகி வருகிறதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வெள்ளை வான் கொள்கை மிகவும் முட்டாள்தனமான வேலை. அதனைவிட செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன என்றார்.

அமைச்சர் இவ்வாறு கூறிய போதிலும் வெள்ளை வானுக்கு மாற்று என்ன என்பதை கூறவில்லை.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நபர்கள் வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். சிலர் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இன்னும் சிலர் கப்பம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலர் கடந்த காலத்தில் காணாமல் போனதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும் அக்கடத்தல்களுக்கு காரணமானவர்களோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.