ஐ.நா, இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது!

தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளியிடக்கோரியும் இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. கால அவகாசம் வழங்கக்கூடாதென வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இம்மாதம் 20ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் இப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், 21ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்காக மகஜரொன்றை கையளிக்கவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இம் மக்கள் தீர்மானித்துள்ளனர்.

நல்லாட்சியையும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளையும் நம்பி ஏமாந்துவிட்டோம் எனத் தெரிவிக்கும் இம் மக்கள், தமது உறவுகள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த இலங்கைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள இம்மக்கள், கடந்த எட்டு வருடங்களாக உறவுகளை இழந்து பரிதவிக்கும் தமக்கு, சமூக அமைப்புகள், பல்கலைக்கழக குழுக்கள் என சகலரும் ஆதரவு தந்து தமது போராட்டத்திற்கு வலுசேர்க்க உதவுமாறு கோரி நிற்கின்றனர்.