வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் தான் என்று உச்சநீதிமன்றம் பரபரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் நான்கு பேரும் ஏதாவது ஒரு முக்கிய காரணத்திற்காக மட்டுமே பரோலில் வெளியில் வர முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் 2016 ஜூன் 7ல் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தனர். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தனர்.
ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லை எனவே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இந்நிலையில், அவர்கள் மறு சீராய்வு மனுதாக்கல் செய்தாலும் கூட சிறையில் இருந்து வெளியில் வர முடியாது. ஏதாவது ஒரு முக்கிய காரணத்திற்காக மட்டுமே பரோலில் வெளியில் வர முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.







