மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் யார் வசமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலைய இல்லம் உள்ளது. 1967-ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் அவரது தாயார் சந்தியா ஆகியோரால் வாங்கப்பட்ட இந்த இல்லம் சுமார் 24,000 சதுரடி பரப்பளவை கொண்டது. அதன் சந்தை மதிப்பு ரூ.44 கோடி என கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா கூறியிருந்தார்.
சுமார் 49 ஆண்டுகள் போயஸ் கார்டனில் வசித்துவந்த ஜெயலலிதா தனக்கு பின்னர் அது யாருக்கு சொந்தமாக வேண்டும் என உயில் எழுதி வைத்ததாக எவ்வித தகவலும் இல்லை. இருப்பினும் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதாவுடன் வசித்து வந்த அவரது தோழி சசிகலா மற்றும் அவரது அண்ணி இளவரசி ஆகியோர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் தொடர்ந்து போயஸ் கார்டனில் வசித்துவந்தனர்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் சிறை செல்வது உறுதியாகியுள்ளது. இதனால் போயஸ் கார்டன் இல்லம் யார் வசமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் கார்டன் இல்லம் ஜெ., நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனை ஏற்று போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றப்படுமா அல்லது சசிகலாவின் உறவினர்கள் யாரேனும் தொடர்ந்து போயஸ் கார்டனில் வசிப்பார்களா என்பது விரைவில் தெரியரும்.
முன்னதாக ஒருமுறை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இருந்போது போயஸ் கார்டன் வீட்டை இளவரசியின் மகள்கள் இருவரும் பார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.







