பாதிக்கப்பட்டோரையும் சாட்சிகளையும் பாதுகாக்கவேண்டிய தேசிய பாதுகாப்பு அதிகார சபையில், ஐ.நா. அறிக்கையொன்றில் சித்திரவதை தொடர்பில் குற்றமிழைத்தவர்களாக பெயரிடப்பட்டுள்ள இருவர் நியமிக்கப்பட்டிருப்பதானது குற்றமிழைத்தோரை பாதுகாப்பதாக அமைந்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
உண்மை மற்றும் நீதி பொறிமுறைக்கான சர்வதேச நீதித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘ஆடுகளின் காவலுக்கு ஓநாயை வைத்தல்’ எனும் தலைப்பில் குறித்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள ஆவணத் தொகுப்பொன்றில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு அல்லது பாதுகாப்பு படைகளுக்கு எதிராக யாரும் சாட்சியமளிக்காமல் இருப்பதானது தற்போதைய முறைமையின் கீழ், சாட்சிகள் பாதுகாப்பை எதிர்பார்க்க வேண்டியிருக்கின்றதென்றும் இது அவர்களது உயிரை பணயம் வைப்பதாக அமையுமென்றும் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு அதிகார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒரு அதிகாரி, யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வுக்கு பொறுப்பாக செயற்பட்டவர். உண்மை மற்றும் நீதிப்பொறிமுறைக்கான சர்வதேச செயற்றிட்ட அமைப்பின் ஆதாரங்களுக்கு அமைய, கடந்த காலத்தில் இவரது பொறுப்பின் கீழ் இருந்த முகாம்களில் சித்திரவதை இடம்பெற்றதாக 14 பேர் சாட்சியமளித்துள்ளனர். இச் செயற்பாடு குற்றமிழைத்தவர்களை அரசாங்கம் காப்பாற்ற முயற்சிக்கின்றதென தெட்டத் தெளிவாக புலப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் மூலம் ஐ.நா.பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பான தமது கடப்பாட்டை அரசாங்கம் மீறிவிட்டதாக யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.