சசிகலாவை முதல்வராக்க துடித்துக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியம் சாமி. ஆனால் அவருக்கு செக் வைக்கும் வகையில் களம் இறங்கியுள்ளது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.
சசிகலாவுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் சாமி. அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கோழை என்று விமர்சிக்கிறார். இந்த நிலையில் இன்றைக்குள் ஆளுநர் தனது முடிவை அறிவிக்காவிட்டால் வழக்குத் தொடர வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து சட்டப் பஞ்சாயத்து களம் இறங்கியுள்ளது. இதுதொடர்பாக அதன் முகநூல் பக்கத்தில் போடப்பட்டுள்ள பதிவு:
சசிகலாவை முதல்வராக்க சுப்பிரமணியம் சாமி துடிக்கிறார் .. நாளைக்குள் முதல்வரை முடிவு செய்யாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்கிறார். சுப்பிரமணிய சாமி. அவர் அப்படி வழக்குத் தொடுத்தால் உடனே உச்சநீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக “கேவியட்” மனுவை தாக்கல் செய்யச் சொல்லி டெல்லியிலுள்ள நமது வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
கேவியட் மனு தாக்கல் செய்தால், நம்முடைய கருத்தையும் கேட்டுவிட்டுத்தான் நீதிபதிகள் அவரின் வழக்கு மீது தீர்ப்பு கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சசிசகலாவை முதல்வராக்கத் துடிக்கும் சாமியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும் என்று தெரிகிறது.







