இலங்கை ஊடாக விமானங்கள் பறப்பதில் சிக்கல்!

இலங்கையில் விமான பயண கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்கள் காரணமாக பாதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து பறக்கும், தரையிறங்கும் மற்றும் விமான எல்லையில் செயற்படும் விமானங்களின் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

விமான எல்லை ஊடாக பறக்கும் விமானங்களின் செயற்பாடு நடவடிக்கைகளில் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை விமான செயற்பாட்டிற்காக 120 கட்டுப்பாட்டாளர்கள் அவசியமாக உள்ள நிலையில் 82 பேர் மாத்திரமே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு நாளில் இலங்கைக்கு வருகின்ற, வெளியேறுகின்ற மற்றும் விமான எல்லையில் பறக்கின்ற விமானங்களின் மொத்த எண்ணிக்கை 300 ஆகும்.

இதற்கு மேலதிகமாக இலங்கையினுள் பயிற்சி விமானங்கள் மற்றும் ஏனைய 100 விமானங்கள் பறப்பதாகவும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு தீர்வாக புதிதாக 36 விமான கட்டுப்பாட்டாளர்கள் இணைத்துக் கொள்ளுமாறு துறைசார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனினும் இதுவரையில் அது செயற்படுத்தப்படவில்லை என அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.