ஒரே நாளில் 2வது முறையாக மிரட்டல் தொனியில் சசிகலா பேசியுள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
முதல்வர் பதவியை அடைய சசிகலா மிக மிக வேகம் காட்டுகிறார், அவசரப்படுகிறார், அதனால் நிதானத்தை இழக்க ஆரம்பித்துள்ளார் என்று அரசியல் நிபுணர்கள் இதைப் பார்க்கிறார்கள்.
முதலில் இன்று பிற்பகலில் போயஸ் தோட்ட வளாகத்தில் கூடிய தனது ஆதரவாளர்களிடையே அவர் பேசுகையில், ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். அதற்கு மேல் போனால் செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று அவர் கூறியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவின் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது.
இதுவரை பொறுமையாக இருந்தோம். நாளை வேறு விதமாக போராடுவோம் என்று அவர் கூறியுள்ளதும் கூட மிரட்டல் தொனிதான் என்று சலசலப்பு எழுந்துள்ளது. இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து மிரட்டல் தொனியில் பேசியிருப்பதன் மூலம் சசிகலா தரப்பு பிரச்சினை செய்யும் திட்டம் எதையும் கையில் வைத்துள்ளதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.







