பார்வையற்றோர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா

பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

முதலில் ஆடிய இலங்கை அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 174 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் ஆடிய இந்திய அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பிரகாஷ் 115 ரன்னும் (52 பந்துகளில் 23 பவுண்டரியுடன்), அஜய்குமார் ரெட்டி 51 ரன்னும் (30 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று பெங்களூருவில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டி பெங்களூருவில் நாளை நடக்கிறது.