அனைத்து சாதனைகளையும் வீராட் கோலி முறியடிப்பார்: கவாஸ்கர்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி கேப்டன் வீராட் கோலி இரட்டை சதம் (204 ரன்) அடித்து முத்திரை பதித்தார்.

தொடர்ந்து 4 டெஸ்ட் தொடரில் 4-வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 தொடர்களில் 4 இரட்டை சதம் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு பிராட் மேன், டிராவிட் 3 தொடர்களில் 3 இரட்டை சதம் அடித்து இருந்தனர்.

இந்த நிலையில் கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் வீராட் கோலி முறியடிப்பார் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணணையாளருமான சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை தகர்த்து எறியும் வகையில் வீராட் கோலி அதிரடியாக விளையாடுகிறார். அவர் பவுலர்களை அடக்கி விடுகிறார்.

தொடர்ந்து நிலையாக விளையாடுவது அவரது வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது.

கிரிக்கெட்டில் உள்ள அனைத்து சாதனைகளையும் வீராட் கோலி முறியடிப்பார். அவர் ஒரு சகாப்தமாக உருவெடுத்து வருகிறார்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.