புலி பூச்சாண்டி எதற்காக..? சிங்கள மக்கள் இதை உணர வேண்டும்..! எழுக தமிழில் வெடித்த வடக்கு முதல்வர்

விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டதாக தெரிவிக்கும் அரசாங்கம், மீண்டும் புலிகள் வரப்போகின்றார்கள் என பூச்சாண்டி காட்டுவதற்கு காரணம் என்னவென்று வடக்கு முதல்வர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பின் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

69 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் எங்கள் குறைகளை கூறிக்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் செவிடன் காதில் மகுடி ஊதிய கதைபோலவே அவை இருக்கின்றன.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 8 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தினரைத் திரும்ப அழைக்காததன் மர்மம் என்ன..? விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டதாகக் கூறுகின்றார்கள்.

பின்னர் எதற்காக வடக்கிலும் கிழக்கிலும் வான் படைகளும், கடற்படைகளும், காலாற்படைகளும்? அளவுக்கதிகமான படைகளைத் தம்முடைய தரைகளில் நிலை நிறுத்த இடமில்லை என்றுதான் அவர்களை எம்மத்தியில் உலாவ விட்டுள்ளார்களா?

அல்லது நாம் எவரும் சுதந்திரக்காற்றை உட்கொள்ளக்கூடாது என்று நினைக்கின்றார்களா? அல்லது எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப விடாது எம் மக்களின் காணிகளையும், வீடுகளையும் கடைகளையும், கடற்கரைத் தொழில்களையும், விவசாய நில புலன்களையும் நிரந்தரமாகச் சுவீகரித்து எம்மை அடக்கி ஆள நினைக்கின்றார்களா?

வெளிநாட்டவர்கள் எம் நாட்டில் யுத்தம் முடிந்த பின் நடந்து வருவதை நன்றாக உணர்ந்துள்ளார்கள். ஆகவே ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவான எங்களுடைய நடவடிக்கைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் வரவேற்கின்றன.

உரிமைகள் அற்றவர்கள் தான் உரிமைகளையும் உரித்துக்களையும் கேட்பார்கள். உரிமைகள் இருந்திருந்தால் ஏன் வெயிலில் இருந்து, பனியில் காய்ந்து, மழையில் நனைந்து கேட்கப்போகின்றார்கள்? இல்லாததால்த்தானே கேட்கின்றோம். இதைச் சிங்கள மக்கள் உணர வேண்டும்.

இதேவேளை, இறுதி யுத்தம், ஒருதலைப்பட்சமாக சர்வதேச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் எவருடைய பிரசன்னங்களும் இல்லாத நிலையில் சர்வதேச போர் விதிகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை சிங்கள மக்கள் யாவரும்அறிவர்.

இதன் போது கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல. சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் பெருவாரியாகக் கொல்லப்பட்டனர்.

அவர்களின் எண்ணிக்கை திரிபுபடுத்தப்பட்டு மிகச் சொற்ப தொகையாக எந்தவித மனச்சாட்சியுமின்றி சர்வதேச உலகிற்கு காட்டப்பட்டுள்ளது என அவர் மேலும், தெரிவித்துள்ளார்.