இதுவரை காலமும் உள்ளூராட்சி சபைகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டட நிர்மாணம் மற்றும் காணி அபிவிருத்திப் பணிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுதல், அவற்றை மதிப்பீடு செய்தல், திட்டங்களை வகுத்தல், கட்டணங்களை அறவிடுதல் ஆகிய பாரிய நிர்மாணங்களுக்கான பணிகள் இம்மாதம் முதலாம் திகதி முதல் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்று அச்சபையின் தலைவர் கலாநிதி ஜகத் முனசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போது
“1978ஆம் ஆண்டின் நகர அபிவிருத்திச் சபையின் சட்ட மூலத்துக்கமைய கட்டட நிர்மாணங்களைத் திட்டமிடுதல், காணிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற பணிகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் வந்தபோதிலும் அந்தப் பணிகளில் ஏற்பட்ட ஒருசில பின்னடைவுகளால் அவை 1985ஆம் ஆண்டு முதல் உள்ளூராட்சி சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
எனினும், கட்டட நிர்மாணங்களில் பாவிக்கவேண்டிய நவீன தொழில் நுட்பங்கள் உள்ளூராட்சி சபைகளிடம் இல்லாதிருந்த படியால் திட்டங்கள் தாமதமாகுதல், குறைபாடுகள் ஏற்படுதல் போன்ற பின்னடைவுகள் ஏற்பட்டு வந்தன.
அதன் காரணமாக நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களையும், அரச மற்றும் கூட்டுத்தாபனக் கட்டடங்களையும் நிர்மாணித்தல், சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய கட்டடங்களைத் திட்டமிடுதல், செயற்படுத்தல், 40 பேர்ச்சஸ் விஸ்தீரணத்துக்கு மேற்பட்ட காணிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற பணிகள் இம்மாதம் முதலாம் திகதிமுதல் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” – என்றார்.
இதேவேளை, இந்தத் தீர்மானம் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபை தலையிடுவதற்கு வழிவகுக்கும் எனவும், 1985ஆம் ஆண்டுமுதல் இதுவரை உள்ளூராட்சி சபைகளால் திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டுவந்த கட்டட நிர்மாணங்கள் மற்றும் காணி அபிவிருத்திப் பணிகளைப் பறித்தெடுப்பது நியாயமற்றது எனவும் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.