ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு.! அச்சுறுத்தியவர்களின் உருவங்களை வரையுமாறு நீதிபதி உத்தரவு!!

யாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் இன்று ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 14ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த படுகொலையின் சாட்சியமான மாற்றுத்திறனாளி சிறுவனை அச்சுறுத்தியவர் தொடர்பில் சிறுவனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அச்சுறுத்தியவர்களை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, சாட்சியமாக உள்ள சிறுவன் வாய் பேச முடியாதவனாக உள்ளார்.

எனவே, சிறுவனின் வாக்கு மூலத்தை தமிழ் மொழி நன்கு அறிந்த, சிறுவனின் சைகை மொழி அறிந்த ஒருவரின் உதவியுடன் பொலிஸார் பதிவு செய்ய வேண்டும் என மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், சாட்சியமாக உள்ள சிறுவனின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்றுக்கு உள்ள தற்துணிவு அதிகாரித்தை பயன்படுத்தி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

இதனையடுத்து கட்டளை பிறப்பித்த நீதிபதி, சிறுவனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, சிறுவன் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட வேண்டும். சிறுவனின் சைகை மொழி தெரிந்தவரின் உதவியுடன் வாக்கு மூலத்தை பொலிஸார் பதிவு செய்ய வேண்டும்.

சிறுவனுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன், உரிய நிபுணர்களின் உதவியுடன் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் சிறுவன் கூறும் அடையாளங்களின் அடிப்படையில் உருவங்களை வரைந்து சந்தேகநபர்களை கைது செய்யவேண்டும்.

அவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தனியாக வழக்கு தொடருமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ். ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 7 மாத கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.