அதிமுகவின் பொருளாளராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வந்த ஓ.பன்னீர் செல்வம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒ.பன்னீர் செல்வத்திற்கு பதிலாக அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். போயஸ் தோட்டத்தில் மூத்த கட்சித்தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமில்லாத பதவியாக பொருளாளர் பதவி மாறிவிட்டதாக பேசப்பட்டது. காரணம் அதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்தவர்களின் அரசியல் அஸ்தமனமாகிப் போனது என்பதுதான். இது ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இப்போது சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
ஒ.பன்னீர் செல்வத்திற்கு பதிலாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்துள்ளார் சசிகலா. இவர் ஏற்கனவே அதிமுக பொருளாளராக இருந்து அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.







