யானைத் தந்தங்களில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு பிரிட்டன் தடை!

யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடி, அவற்றிடமிருந்து, தந்தம், கொம்பு ஆகியவற்றை சட்ட விரோதமாக சில கும்பல்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. பின்னர், அப்பொருட்களைக் கொண்டு கலைநயமிக்க பொருட்கள் பிரிட்டனில் உருவாக்கப்படுகின்றன.
இதனால், கடந்த செப்டம்பர் மாதத்திலேயே 70 ஆண்டுகளுக்குக் குறைவான தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடை விதித்து பிரிட்டன் அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், கடத்தல்காரர்கள் எந்தக் கட்டுப்பாட்டையும் எளிதில் உடைத்து, தந்தங்களின் விற்பனையைத் தடையில்லாமல் மேற்கொண்டு வந்தனர். 70 ஆண்டுகளுக்குக் குறைவான தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடை விதித்தபோது, புதிய தந்தங்களைப் பழைய தந்தங்கள் போல மாற்றி, சான்றிதழும் பெற்றுவிடுகின்றனர்.
எனவே, முழுமையான தடை தற்போது விதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் தந்தங்களால் ஆன பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உலக வனவிலங்குகள் நிதியகம் வலியுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது 3,50,000 யானைகளே எஞ்சியிருக்கின்றன.
பிரிட்டனின் இந்த நடவடிக்கை மூலம் ஆப்பிரிக்க யானைகள் சட்ட விரோதமாக வேட்டையாடுவது தடுக்கப்படும். மேலும், சட்ட விரோத கும்பல்களை கண்டறிந்து சர்வதேச நாடுகள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.