ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல பகீர் சந்தேகங்களை அதிமுக மூத்த தலைவர் பிஹெச் பாண்டியன் எழுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஏராளமான அதிர்ச்சி நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா, தமிழக முதல்வர் பதவியிலும் உட்கார இருப்பதை ஏற்க முடியாத நிலையில் கொந்தளிப்புடன் இருக்கின்றனர் பொதுமக்கள்.
இந்த நிலையில் சென்னையில் அதிமுக மூத்த தலைவர் பிஹெச் பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
தற்போது அதிமுக தொண்டர்களின் தேர்வாக இருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் செய்தியாளர்களை சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தரப்பில் இருந்து என்ன அணுகுண்டு விழுமோ என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.







