தம்புள்ள சர்வதேச கிரிக்கட் மைதானத்தின் அரங்கின் கூரையின் மீது ஏறி மைதான பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மைதானத்தில் பணியாற்றும் 11 ஊழியர்களால், இந்த போராட்டம் இன்று முற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தாங்கள் கடந்த 10 வருடங்களாக இங்கு பணியாற்றி வருவதாகவும், தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரியும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதற்கு முன்வரவில்லை என அந்த ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் தமது சேவை நிரந்தரமாக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களது சேவையினை நிரந்தரமாக்க, இலங்கை கிரிக்கட் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தற்போது தெரிவித்துள்ளார்.