தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளதால், இரட்டை அதிகார நிலைப்பாட்டினால் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கி.வீரமணி கூறியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை,
முதல் அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கடிதத்தை அ.தி.மு.க.வின் தலைமையான பொதுச்செயலாளரிடம் கொடுத்துள்ளார். அவரே கட்சியின் பொதுச்செயலாளரான திருமதி வி.கே.சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார்.
அதன்படி, கட்சியின் சட்டசபை உறுப்பினர்களான எம்.எல்.ஏக்களால் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க தனது இசைவினைத் தெரிவித்த நிலையில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முந்தைய ஜெயலலிதா அரசின் கொள்கை நிலைப்பாடுகளை அப்படியே பின்பற்றும் தனது தலைமையிலான அரசு என்றும் தனது ஏற்புரையில் தெளிவாக்கியுள்ளார்.
பெரிதும் ஆணாதிக்கம் கோலோச்சும் உலகில் மீண்டும் ஒரு பெண், கட்சித்தலைமை, ஆட்சித்தலைமை இரண்டையும் பெற்று அரசியல் பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல திருப்பமே! – வரவேற்கப்படவேண்டியது. புதிய முதல்வருக்கு வாழ்த்துக்கள் என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.