சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடியில் மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்திதைப் போல் தமிழகத்தை காக்க சசிகலாவுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக சட்டசபைக்குழு தலைவராக சசிகலா நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாளை அல்லது 9ஆம் தேதி அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா முதல்வராகவுள்ளார் என்ற செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பாக செயல்பட்ட ஓபிஎஸ்
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
சவால்களை சந்தித்த ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்ற சில நாட்களிலேயே பெரிய சவாலாக வந்த வர்தா புயலின் போது களத்துக்கே சென்று மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இதேபோல் கிருஷ்ணா நதிநீர் வழங்கக்கோரி ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
விவசாயிகள் பிரச்சனையிலும் விரைந்து செயல்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
முதல்வர் பதவி ராஜினாமா
முதல்வராக பதவியேற்றது முதல் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டதால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது. இந்நிலையில் நேற்று சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
போடியில் உண்ணாவிரதம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக மக்கள் ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவரது சொந்த தொகுதியான போடியில் உள்ள வெம்பக்கோட்டையில் நேற்றிலிருந்து மக்கள் விடியவிடிய உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்துக்கு வலியுறுத்தல்
இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சசிகலாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதை போல சசிகலா முதல்வராக வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.