ஓபிஎஸ் 4வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது : ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து சசிகலாவை சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். விரைவில் அவர் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் 4வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து தள்ளிவைப்பது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது என்றார்.

ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் பாலைவனமாக இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. இப்போது முதல்வர் பதவிக்கு போட்டி நிலவுகிறது. ஒரு கேலிக்கூத்து அரங்கேறி வருகிறது.

சொத்துக்கு வழக்கில் விரைவில் தீர்ப்பு அளிக்கப் போவதாக இன்று காலையில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற வழக்கில் இருந்து விடுதலை பெற்றனர். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரப்போகிறது.

ஜெயலலிதா பதவிவிலகும் போதெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானார். இதுவரை 3 முறை ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்துள்ளார். இனி நான்காவது முறையாக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்பார். அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.