இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து கெவின் பீட்டர்சன் விலகல்

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் விளையாடப்போவதில்லை என்று இங்கிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சன் நேற்று அறிவித்தார்.

இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில் ‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் நான் பங்கேற்கமாட்டேன். குளிர்காலத்தில் நான் அதிக அளவிலான போட்டிகளுக்காக வெளியூர்களில் சுற்றினேன். இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வெளியூரில் நேரத்தை கழிக்க நான் விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கெவின் பீட்டர்சன் கடந்த ஆண்டு (2016) ஐ.பி.எல். போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். காயம் காரணமாக 4 ஆட்டங்களில் மட்டுமே ஆடிய அவர் கடந்த டிசம்பர் மாதத்தில் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.