கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தவர் லெட்சுமி. இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆதர்ஷ் (வயது 25).
மாணவி லெட்சுமியை ஆதர்ஷ் ஒருதலையாக காதலித்து வந்தார். அவரது காதலை லெட்சுமி ஏற்காததால் ஆத்திரமடைந்த ஆதர்ஷ் கல்லூரிக்குள் புகுந்து மாணவி லெட்சுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். பிறகு அவரும் மாணவியை கட்டிப்பிடித்துக் கொண்டார்.
இதில் உடல் கருகிய அவர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். சக மாணவ, மாணவிகள் கண் முன்பு இந்த கொடூரம் அரங்கேறியதால் கல்லூரியே அதிர்ச்சியில் உறைந்தது.
மகள் லெட்சுமிக்கு நேர்ந்த கதியை அறிந்ததும் அவரது தாய் ஆஷாராணி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு லெட்சுமியின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடன் படித்த மாணவ, மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினர் லெட்சுமியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
லெட்சுமியின் நெருங்கிய தோழிகள் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்கள் கூறும் போது ‘‘லெட்சுமி மிகவும் அமைதியாக இருப்பார். அவருக்கு இப்படி நடக்கும் என்று நாங்கள் நினைத்து பார்க்கவில்லை. எங்கள் கண்முன்பே தோழிக்கு நேர்ந்த கதியின் அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீளமுடிய வில்லை. கல்லூரி வளாகத்திற்குள் அன்னியர்கள் அத்துமீறி நுழையாமல் இருக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
மாணவி லெட்சுமி மரணத்தை தொடர்ந்து அந்த கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.







