பெண்ணின் மூக்கில் நுழைந்து மூளைக்கு சென்ற கரப்பான் பூச்சியை சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வெற்றிகரமாக அகற்றியுள்ளது.
ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த செல்வி(42) தனது வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது மூக்கின் வழியாக ஏதோ சென்றது போல் இருந்துள்ளது.
அதன்பின்னர், சிறிது நேரம் கழித்து தலையில் குடைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர், மூக்கிள் சதை வளர்ந்திருக்கும் எனக்கூறி வலி மருந்தினை கொடுத்து அனுப்பியுள்ளார்.
அதனை சாப்பிட்ட பின்னரும் செல்விக்கு வலி குறையவில்லை. இதனால், வேறொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் இவரின் மூளைக்கு அடிப்பகுதியில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டுபிடித்தனர்.
செல்வி, தூங்கிக் கொண்டிருந்த போது மூக்கின் வலது துவாரம் வழியாக கரப்பான் பூச்சி புகுந்து மூளையின் அடிப்பகுதி வரை சென்றிருப்பது தெரியவந்ததுள்ளது.
இதனை உடனடியாக அகற்ற ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லுங்கள் என மருத்துவர் வலியுத்தியதையடுத்து, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை காது மூக்கு தொண்டை பிரிவு டாக்டர்கள் எம்.என்.சங்கர், முத்து சித்ரா ஆகியோர் மூக்கு உள்நோக்கு கருவி மூலம் பரிசோதித்தனர். அப்போது மூளையின் அடிப்பகுதியில் கரப்பான் பூச்சி உயிரோடு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நேஷல் எண்டோஸ் கோப்பி கருவி மூலம் கரப்பான் பூச்சி உயிருடன் அகற்றப்பட்டது. அதன் பிறகு செல்விக்கு வலி தீர்ந்தது. அவர் நலமாக உள்ளார்.









