ஜெயலலிதா மரணத்தில் ரகசிய உடன்படிக்கை: டி.ராஜேந்தர் பரபரப்பு பேட்டி!

ஜெயலலிதா மரணத்தில் வெள்ளை அறிக்கை கேட்ட எதிர்கட்சியினர் தற்போது எதுவும் பேசாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும், லட்சிய திமுக-வின் தலைவருமான டி.ராஜேந்தர்.

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த லட்சிய திமுக கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் கூறுகையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

பிரதமரும் உதவிகளை செய்து தந்தார், முதல்வரின் நடவடிக்கையை பாராட்டுகிறேன்.

அதேநாளில் தம்பிதுரை அவர்கள் பிரதமரை சந்திக்க முயற்சி செய்தார், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

ஒருவேளை ஜெயலலிதா உயிருடன் இருந்து பிரதமரை சந்தித்திருந்தால் தம்பிதுரை இப்படித்தான் நடந்து கொண்டிருப்பாரா?

இதிலிருந்தே தெரிகிறது அதிமுக-வில் உட்கட்சி பூசல் என்று, கட்சிக்குள்ளேயே இருக்கிறது கீறல். அதனால்தான் நடந்துள்ளது காவல்துறை அத்துமீறல்.

அறவழி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்? ஓபிஎஸ் தான் நிஜ முதல்வர் என்றால் இடையில் புகுந்து விளையாடியது யார்?

முதல்வரை ஆழ்மனதில் இருந்து பாராட்ட வேண்டும் என்றால் கைது செய்துள்ள மாணவர்களை விடுவிக்க வேண்டும்.

அதிமுகவில் புதிதாக புகுந்துள்ளதோ அதிகார மையம், உருவாகியுள்ளது ஐயம். ஜனநாயகத்தில் ஊடகமும் ஒரு தூண்தானே. நீங்களே அந்த அதிகார மையம் யார் என்பதை கண்டறியுங்கள்.

சட்டசபையில் கூட ஜெயலலிதா மரணம் பற்றி எதிர்க்கட்சிகள் எதுவும் பேசவில்லை, மறைமுக உடன்படிக்கையின்படியே கட்சிகள் செயல்படுகின்றன.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.