விரைவில் தமிழக முதல்வராகிறார் சசிகலா?

தமிழக முதல்வராகும் முயற்சியில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டாராம் அதிமுகவினரின் சின்னம்மா சசிகலா. விரைவில் தமிழக முதல்வர் நாற்காலியில் சசிகலா அமருவார் என்கின்றன போயஸ் கார்டன் வட்டாரங்கள்.

ஜெயலலிதா மறைவின் போதே முதல்வர் பதவியில் அமர திட்டமிட்டார் சசிகலா. ஆனால் மத்திய அரசு முதல்வராக ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியது.

இருப்பினும் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு மன்னார்குடி குடும்பத்தில் சசிகலா, நடராஜன், தினகரன், திவாகரன் ஆகியோர் குறி வைத்தனர். இந்த விவகாரத்தில் மன்னார்குடி குடும்பத்தில் உச்சகட்ட பனிப்போர் நடந்து வந்தது.

மோடி உத்தரவாதம்
இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியிடமும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புலம்பியிருந்தார். முதல்வராக நீங்களே தொடர வேண்டும் என பிரதமர் மோடியும் உத்தரவாதம் கொடுத்திருந்தார்.

ஓபிஎஸ் புலம்பல்
அதே நேரத்தில் சசிகலா தரப்பு நெருக்கடி கொடுத்தால் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் எனவும் தமது உறவினர்களிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புலம்பியும் வந்தார். இதை நாம் நமது ஒன் இந்தியா தமிழில் பதிவு செய்திருந்தோம்.

டெல்லி லாபி
தற்போது சசிகலா தரப்பு படுவேகமாக டெல்லி லாபிகளில் இறங்கியுள்ளதாம். சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட மூவரும் முதல்வர் போட்டியில் இருந்து ஒதுங்கிவிட்டனராம். இதனால் சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்கக் கூடும் என்கின்றன போயஸ் கார்டன் வட்டாரங்கள்.

ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு
இந்த நம்பிக்கையில்தான் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாம். டெல்லியின் முழு ஒத்துழைப்பு எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறதாம் மன்னார்குடி குடும்பம்.