பொழுதுபோக்குக்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தி முடித்த சசிகலா!

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு குடைச்சல் கொடுக்கவும் தமக்கு பொழுதுபோக வேண்டும் என்பதற்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டதை நேற்றைய கூட்டத்தின் மூலம் உறுதி செய்திருக்கிறார் சசிகலா.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, நேற்று கட்சி எம்.எல்.ஏக்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த சசிகலாவிற்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்தினர் வரவேற்புக் கொடுத்தனர்.

சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில் எதற்காக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம்? என்ற கேள்வியும் எழுந்தது. ஊடகங்களில் சசிகலா பெயர் வராத நிலையில் வேறு பணியும் இல்லாததால் பொழுதுபோக்கவும் தன்னிச்சையாக செயல்படும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு குடைச்சல் கொடுக்கவுமே இந்த கூட்டம் எனவும் கூறப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சசிகலாவின் உறவினர்கள் டி.டி.வி.தினகரனும், டாக்டர் வெங்கடேசனும் சசிகலாவுக்கு அருகே உடன் இருந்தனர். எம்.எல்.ஏ.க்களோ எந்த ஒரு உற்சாகமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்.

அம்மாவான சசிகலா
கூட்டத்தில் கலந்துகொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. தூசி மோகன் ஆகிய மூன்று பேரும் எழுந்து நின்று சின்னம்மா நீங்க முதலமைச்சரா வரணும் என்று மூன்று முறை கூறினர். அவர்களைப் பார்த்து சிரித்த சசிகலா, பின்னர் பேசத் தொடங்கினார். பலரும் சசிகலாவை அம்மா என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

பிரிக்க சதி நடக்கிறது
எதிர் கட்சியினர் நம்மை பிரிக்கவும், அழிக்கவும் சதி செய்கிறார்கள்.அது எடுபடாது.எடுபடவும் இடம் கொடுக்க கூடாது. அம்மா என்ன கொள்கையில் இருந்தார்களோ, அந்த கொள்கையை, அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். 2019இல் எம்.பி.தேர்தல் வருது. அந்த தேர்தலில் இப்ப உள்ளதுபோல், மகத்தான வெற்றி பெறனும்.

தொகுதிக்கு போங்க
எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொகுதிக்கு போங்க. தொகுதியில் உங்கள் மக்கள் பிரச்னைகளை உடனே தீர்த்து வையுங்க. சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் பேசுங்க. அவங்க செய்யலைன்னா எனக்கு கடிதமா தாங்க. நான் செய்கிறேன் என்றார்.

மத்திய பட்ஜெட்
எம்.பிக்கள் மத்தியில் பேசிய சசிகலா, மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினாராம். அதிமுக எம்.பிக்களுக்கு தனியாக சில ஆலோசனைகளையும் கூறினாராம்.

எதிர்கட்சி யார்?
இந்த கூட்டத்தில், சசிகலா பேசும்போது, எதிரான கட்சி என்று குறிப்பிட்டது திமுகவையா? பாஜகாவையா என்பதுதான் பலருக்கும் குழப்பமாக இருந்தது. கடந்த பொங்கல் விழாவில் பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன், அதிமுகவை பாஜக உடைக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார். மாநிலத்தை காவிமயமாக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். இதை மனதில் வைத்துதான் ஒற்றுமை பற்றி பேசியுள்ளார் சசிகலா.

ஏமாற்றமடைந்த எம்.எல்.ஏக்கள்
ஆனால் தனது பேச்சில் ஒரு இடத்தில்கூட திமுக என்று சசிகலா குறிப்பிடாமல் பேசினார். ஜெயலலிதா இருந்திருந்தால் தைரியமாக கட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு பேசியிருப்பார் என்று பல எம்.எல்.ஏக்கள் பேசிக்கொண்டனர். சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் எந்த ஒரு அஜெண்டாவுமே இல்லாமல் அவருக்கு பொழுதுபோகத்தான் இந்த கூட்டமா? என நொந்து போயினராம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்