கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ஸ்டெலா ரணதுங்க ஆகியோருக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி பிரசன்ன ரணதுங்க எதிர்வரும் 2ம் திகதி முதல் 4ம் திகதி வரையில் குவைத்துக்கு செல்வதற்கும், மொரின் ஸ்டெலா எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 2ம் திகதி வரையில் அவுஸ்திரேலியா செல்வதற்கும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய காலத்தில் கொலன்னாவ மீதொட்டுமுல்ல பிரதேச காணி ஒன்றை வழங்குவதாகக் கூறி வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபா பணம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் பிரசன்ன ரணதுங்க, மொரின் ஸ்டெலா மற்றும் ஒரு நபருக்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் போது பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென நீதிவதி அறிவித்துள்ளார்.
தற்காலிக அடிப்படையில் பிரசன்ன மற்றும் அவரது மனைவியின் பயணத் தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.
இது குறித்து குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







