மீண்டும் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் : தபால் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

முன் அறிவித்தல் இன்றி தொழிற்சங்கப் போராட்டம் நடத்த நேரிடும் என தபால் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை நடாத்த பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் ஒரு வார காலத்திற்குள் நேரத்தை ஒதுக்கித்தர தவறினால் அறிவிக்காமல் தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்த நேரிடும் என தபால் தொழிற்சங்கங்கள் ஒன்றிய கூட்டமைப்பின் அழைப்பாளர் சின்தன பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்று தொழிற்சங்கப் போராட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பேச்சுவார்த்தை நடத்த நேரத்தை ஒதுக்கித் தருமாறு கோரி எழுத்த மூல கோரிக்கைகள் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் பணிப்பகிஸ்கரிப்பு வரையிலான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என சின்தன பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.