தனது ஆட்சிக்காலத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை காப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைக் கைப்பற்ற முனைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவுக்கு ஒருபோதும் சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மஹிந்தவுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்காது என்கின்ற போது, மஹிந்தவால் ஒருபோதும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அன்று மஹிந்தவுடன் இருந்த அனைவருமே மோசடியில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவித்த ஆனந்த அலுத்கமகே, இவற்றிலிருந்து தம்மை பாதுகாக்கவே மஹிந்தவை ஆட்சிபீடமேற்ற முயற்சிக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மலையக தமிழ் சமூகத்தைப் பற்றி ஐக்கிய தேசியக் கட்சிக் காரியாலயத்திற்கு வந்து சுதந்திரமாக தம் கருத்துக்களைச் சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென்றும், இதுவே கடந்த அரசாங்கமாக இருந்திருந்தால் கொழும்பில் கதைத்துவிட்டுச் சென்று மலையகத்தில் நிம்மதியாக இருந்திருக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







