தற்காலத்தில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு நோய் அச்சம் நிலவுகிறது.
கொடிய டெங்கு நோயின் தாக்கம் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் மொத்தம் 50519 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதிகளவு டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது 15421 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம் இரண்டாவதாகும். 6263 டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்,
3901 டெங்கு நோயாளர்கள் கண்டி மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பில் கண்டி மாவட்டம் மூன்றாமிடத்தில் உள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கல்முனை போன்ற பிரதேசங்களில் விஷேட கவனம் செலுத்தப்பட்டு, டெங்கு தடுப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் கடந்த வருடம் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 600 ஐ எட்டியுள்ளது.
2017 முதலாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி இரண்டாந் திகதி திறக்கப்பட்ட பாடசாலைகளில் டெங்கு ஒழிப்புப் பணிகள் கடந்த டிசம்பர் 27, 28ம் திகதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவன், கல்முனைக்குடியில் 5 வயது சிறுவன் ஆகியோரின் மரணமடைந்ததையடுத்து இப்பிரதேச மக்கள் அதிகம் அச்சமடைந்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் அண்மைக் காலத்தில் சற்று மந்தநிலையை அடைந்தமையும் அதிகரித்த டெங்கு தாக்கத்திற்கு முக்கிய காரணம் எனலாம்.
தற்போது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இது பொதுமக்கள் மத்தியில் டெங்குநோய் தொடர்பில் அதிகளவு அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது.
நாட்டில் பருவ மழையைத் தொடர்ந்து வரும் காலப் பகுதியில் டெங்கு நோயாளர் தொகை அதிகரிப்பதும், பின்னர் குறைவடைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகையால், பருவ மழையின் போது நீர் தேங்கும் இடங்கள் குறித்து அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் அதிகாரிகள், இவ்விடயத்தில் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
டெங்கு நோயின் நோயரும்பு காலம் 3 முதல் 14 நாட்களாகும். அத்துடன், நான்கு கட்டங்களைக் கொண்ட டெங்கு நோயின் முதலிரு கட்டங்களும் உயிராபத்தற்றவை.
ஆனால், முன்றாம், நான்காம் கட்டங்கள் உயிராபத்தை உண்டாக்குபவை. இரத்தப்போக்கு, அதிர்ச்சி என்பன இக்கட்டங்களில் அடங்குகின்றன.
கடந்த காலங்களில் கொழும்பு, யாழ்ப்பாணம் மாவட்டங்களிலயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
சுகதேகி ஒருவரை டெங்கு நோய் தொற்றிவிட்டால், பல்வேறு அறிகுறிகள் தென்படும். தலைவலி, தசைவலி, மூட்டுவலி, வாந்தி, வயிற்றுழைவு, கண் பின்பகுதியில் வலி, பசியின்மை என்பன அவற்றில் பிரதானமானவையாகும். அத்துடன் சிலருக்கு தோலில் அரிப்பும் அறிகுறியாகக் காணப்படும்.
இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.டெங்கு நோய் நமது நாட்டில் மாத்திரமன்றி உலகில் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது.
குறிப்பாக வளர்முக நாடுகளில் டெங்கு நோய் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. 120 நாடுகளில் வாழும் மூன்று பில்லியன்களுக்கும் அதிகமான மக்கள் இந்நோயின் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இலங்கையில் முதலாவது டெங்கு நோயாளர் 1962ம் ஆண்டு மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டார்.
சர்வதேச நாடுகளில் காணப்படும் பழமையான நோய்களில் ஒன்றான டெங்கு நோய், இலங்கையில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
இருந்தாலும், சர்வதேச ரீதியில் வருடாந்தம் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் டெங்கு இரத்தப் போக்கு நோய்க்கு ஆளாகின்றனர். இவர்களில் சுமார் 22 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
டெங்குநோய் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களில் இரண்டு பில்லியன் மக்கள் தெற்காசிய நாடுகளில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
டெங்கு நுளம்புகள் பார்ப்பதற்கு மிகச் சிறியவையாக இருந்த போதிலும் அவை உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதில் நாங்கள் அவதானமாயிருத்தல் வேண்டும்.
மழைக் காலத்தில் இந்நுளம்புகள் பல்கிப் பெருகி, நோயைப் பரப்புகின்றன. குறித்த நுளம்புகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவது தொடர்பில் நாங்கள் விஷேட கவனம் செலுத்துதல் வேண்டும்.
கடுங்காய்ச்சலுடன் கடுமையான மூட்டுவலி, தசைவலி, தலைவலி, தோல் நமைச்சல் என்பன அறிகுறிகளாகும். இந்நோய் உடலை அதிகம் வருத்துவதால் ‘என்பை முறிக்கும் காய்ச்சல்’ என்றும் அழைப்பதுண்டு.
இந்நோய் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் காணப்படும் தெளிவான விளக்கமின்மை, அசமந்தம் என்பனவும் நோய்த் தொற்று தீவிரமடைவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.
நோய் தொற்றிய பின்னர் அவஸ்தைப்படுவதிலும் பார்க்க, வருமுன் காப்பதே சாலச் சிறந்ததாகும். ஆரோக்கிய வாழ்வு தொடர்பில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
மழை நீர் தேங்குதல், சனத்தொகைப் பெருக்கம், திட்டமிடப்படாத நகரமயமாக்கல், உக்கி அழியாத கழிவுப் பொருட்களின் அதிகரிப்பு என்பன டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கு பெரிதும் உதவுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நாங்கள் வாழும் சுற்றுப்புறச் சுழலில் அதிகம் காணப்படும் தெளிந்த நீர் தேங்கக் கூடிய கைவிடப்பட்ட டயர்கள், உடைந்த பாத்திரங்கள், பிளாஸ்ரிக், யோகட் கப்கள். சிரட்டை, பொலித்தீன் போன்ற பொருட்களில் 50 சதவீதமும், வீட்டுக் கூரைப் பீலிகள், பூச்சாடிகள், வடிகான்கள், நன்னீர் தேங்கக் கூடிய இடங்கள் மூலம் 20 சதவீதமும் டெங்கு நுளம்புகள் பெருகுவதாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோயின் ஆபத்தான கட்டத்தை அடைந்தவர்களுக்கு பின்வரும் அறிகுறிகள் காணப்படும். பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், மலம் கபில நிறத்தில் வெளியேறுதல், உடலில் இரத்தத் தழும்புகள் தென்படல், நிணநீர்க் கணுக்களில் வீக்கம் ஏற்படல் என்பன அவையாகும்.
இவ்வறிகுறிகள் டெங்கு நோயின் மூன்றாம், நான்காம் கட்டங்களாகும் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.நாட்டு மக்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள், பணிகளை சுகாதார அமைச்சு அவ்வப்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இருந்த போதிலும், இவ்விடயங்களில் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராமுகமாக இருந்து, பின்னர் அவதியுறுவதை அவதானிக்க முடிகின்றது.
அதிகமான அரச அலுவலகங்கள், பாடசாலைகள் என்பனவற்றின் சுற்றுப்புறச் சூழல் அதிகம் குப்பை கூளங்களால் நிறைந்து காணப்படுகின்றது.
சந்தைகளில் அகற்றப்படாத நீண்டநாட் குப்பை மேடுகள் காட்சியளிக்கின்றன. வீதியோர வடிகான்களின் நிலையோ மிகவும் அவலமாக உள்ளது.
நீரோட்டமின்றிக் காணப்படும் வடிகான்களில் நீருடன், குப்பை, கூளங்களும் சேர்ந்து சுகாதாரத்திற்கு அச்சறுத்தலாக அமைந்துள்ளன.
அதிகளவிலான வெற்றுக் காணிகள் குப்பை கூளங்களால் நிறைந்து காட்சியளிப்பதை காணலாம்.
டெங்கு ஒழிப்புப் பணிகளுக்கு நாட்டு மக்கள் நிறைவான ஒத்துழைப்பு நல்க வேண்டும். இது எம்மை சுகதேகியாக வாழ வழிவகுக்கும்.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை நாங்கள் ஒருபோதும் மறந்து விடலாகாது.