ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அஸ்வின், முகமது கைப் ஆதரவு!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் அமைதியான முறையில் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், ‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருவதை பார்க்கையில் வியப்பு அளிக்கிறது. தமிழக மக்கள் தொடர்ந்து அமைதியான முறையில் போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைதியான போராட்டம் என்பது அனைவருக்கும் பாடமாக அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் டுவிட்டரில் செய்துள்ள பதிவில், ‘மனதுக்கு நெருக்கமாக உள்ள விஷயங்கள் குறித்து போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. அமைதியான போராட்டத்துக்கு பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ஆர்.அஸ்வின் தனது டுவிட்டர் பதிவில், ‘தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது. ஒற்றுமை, அமைதி, உறுதி ஆகியவை நமது போராட்டம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை காண்பிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.