போர்க் குற்றச் செயல்களுக்காக படையினர் சிறையில் அடைக்கப்படக் கூடாது..!

போர்க்குற்றச் குற்றச் செயல்களுக்காக படையினர் சிறையில் அடைக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் படையினர் போர்க் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்படக் கூடாது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்திற்காக பயங்கரவாதிகளை இல்லதொழித்த படையினரை சிறையில் அடைக்க முடியுமா? எம்மிடம் தன் நம்பிக்கை கிடையாதா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரைவையில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

இலங்கையில் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது. வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

போர் இடம்பெற்றது அது மோசமானது. எனவே வெளிநாட்டு சக்திகளின் வழிகாட்டல்களின் அடிப்படையில் செயல்படுவோம் என அரசாங்கம் கூறியது.

உண்மையில் நாம் அவ்வாறா கூறியிருக்க வேண்டும்? தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆயத்தமாக இருக்கின்றோம் என சர்வதேச சமூகத்திடம் கூற வேண்டும்.

எந்தவொரு பிரஜையினதும் உரிமைகள் முடக்கப்படவில்லை, இது ஓர் ஜனநாயகமானதும் நாகரீகமானதுமான நாடு நாம் அனைத்து மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்கின்றோம் என சர்வதேச சமூகத்திற்கு கூற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.