அரசாங்கத்திலிருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி தனியான அரசாங்கமொன்றை அமைக்க வேண்டிய அவசியம் ஐக்கிய தேசிய கட்சிக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ தற்போதைக்கு கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு மட்டுமே இவ்வாறான ஓர் எண்ணம் ஏற்பட்டுள்ளது.
நாடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. இந்த சவால்களை வெற்றி கொள்ளும் நோக்கில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனியாக அரசாங்கம் அமைப்பது குறித்து கனவு காண்கின்றார்.
கெஹலிய ரம்புக்வெல்லவிற்கும் இந்த சூடு பிடித்துள்ளது.
பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சி அமைத்து 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து, 19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜனாதிபதியின் ஏதேச்சாதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் அதிகாரங்களில் ஒரு தொகுதி நாடாளுமன்றம், பிரதமர், பொலிஸ், நீதிமன்ற, தேர்தல் ஆணைக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1978ம் ஆண்டு முதல் புதிய தேர்தல் முறைமை ஒன்று குறித்து இரண்டு பிரதான கட்சிகளும் அவதானம் செலுத்தி வருகின்றன.
புதிய தேர்தல் முறைமை மற்றும் புதிய அரசியல் அமைப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தனியாக ஆட்சி அமைக்கும் அவசியம் தற்போதைக்கு கிடையாது என எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.