டோனியை புகழ்வதுபோல் கங்குலியை தாக்கினாரா ரவி சாஸ்திரி?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது படுதோல்வி அடைந்தது. இதனால் பயிற்சியாளராக இருந்து டங்கன் பிளெட்சர் நீக்கப்பட்டார். இந்திய அணியின் டைரக்டராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியையும் சேர்த்து கவனித்துக்கொண்டார்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் தலைமை பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பி.சி.சி.ஐ. தள்ளப்பட்டது. சரியான நபரை நேர்ந்தெடுப்பதற்காக கங்குலி தலைமையிலான ஒரு ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டது.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது. ரவி சாஸ்திரி அந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். அவருடன் மேலும் பலர் விண்ணப்பித்திருந்தனர். ஏற்கனவே ரவி சாஸ்திரிதான் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் அனில் கும்ப்ளே இந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது. அந்த பதவி அவருக்குக் கிடைத்தது. இதனால் ரவி சாஸ்திரி ஏமாற்றம் அடைந்தார். அத்துடன் தனக்கு அந்த பதவி கிடைக்காததற்கு கங்குலிதான் காரணமாக இருக்கும் என நினைத்தார்.

இதுகுறித்து அப்போது மோதல் வெடித்தது. இருவரும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டனர். அதன்பின் அந்த பிரச்சினை அப்படியே ஓய்ந்தது.

தற்போது சில நாட்களுக்கு முன் இந்திய அணியின் சாதனைக் கேப்டன் மகேந்திர சிங் டோனி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். டோனி குறித்தும், இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்கள் குறித்தும் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்தார்.

அப்போது மகேந்திர சிங் டோனியை தாதா கேப்டன் (Dada Captain) என்று புகழ்ந்தார். பொதுவாக ‘தாதா’ என்ற செல்லப்பெயர் கங்குலிக்கு உண்டு. கங்குலி மீதான வெறுப்பில்தான் தாதா கேப்டன் என்று டோனியை புகழ்ந்து கங்குலியை மட்டம் தட்டினாரா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் செயல்பாடு குறித்து பேசப்படும்போது அதில் கங்குலியும் அடங்குவார். கங்குலி தலைமையிலான இந்திய அணி 2003-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்றது. மேலும், ஏராளமான இளம் வீரர்களை அணிக்கு அறிமுகப்படுத்தி அணியை வலுப்படுத்தியவர். சில முடிவுகளை ஆணித்தரமாக எடுக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு மண்ணில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை குவித்தவர்.

ரவிசாஸ்திரி இந்திய அணியின் கேப்டன் பதவியை குறித்து பேசும்போது நான்கு பெயர்களை குறிப்பிட்டார். அதில் கங்குலி பெயர் இடம்பெறவில்லை.

டோனி குறித்தும், இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் குறித்தும் ரவிசாஸ்திரி கூறும்போது ‘‘தாதா கேப்டனுக்கு என்னுடைய வணக்கம். சாம்பியன்ஸ் டிராபி தொடரை கணக்கில் கொண்டுதான் விராட் கோலியிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிக்குரிய அனைத்தையும் டோனி வென்றுள்ளார். அவர் சிறந்த கேப்டன் என்பதை நிரூபிக்க ஒன்றுமில்லை. மிகவும் வெற்றிகரமான இந்திய கேப்டன் என்பதை எளிதாகச் சொல்வேன். அவருடைய சாதனையை எந்தவொரு கேப்டனும் நெருங்க முடியாது.

மேலும் சில குறிப்பிடத்தகுந்த கேப்டன் பெயரையும் கூறலாம். கபில்தேவ் 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையை வென்றார். அதன்பின் 1986-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன் 1971-ம் ஆண்டில் அஜித் வடேகர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தார். பட்டோடியும் சிறந்த கேப்டன். வேறு யாரும் இல்லை’’ என்றார்.

நான்கு கேப்டன்கள் பெயரை கூறிய ரவி சாஸ்திரி, கங்குலியின் பெயரை குறிப்பிடவில்லை. தலைமை பயிற்சியாளர் பதவிக்கான தேர்வில் நடைபெற்ற பிரச்சினையால்தான் கங்குலி பெயரை குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.