நல்லாட்சி அரசு கவிழும்!

நல்லாட்சி அரசு காலப்போக்கில் கவிழும் என லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஸ் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நல்லாட்சி அரசாங்கத்தினைக் கவிழ்ப்பேன் என கூறியதற்கு, அவ்வாறு கவிழ்ப்பதற்கு இடமளிக்க மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, குறித்த கருத்துக்களில் உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்துள்ளது. எல்லா மட்டத்தில் இருந்தும் எதிர்ப்பு வந்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தை விற்பனை செய்யப் போகின்றார்கள்.

அமெரிக்காவிற்கு திருகோணமலையும், சீனாவிற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தினையும் விற்பனை செய்யும் போது, சர்வதேச ரீதியில் பிரச்சினைகள் எழும்போது அதனால் எமக்கு பாதிப்பு ஏற்படும்.

நாட்டில் எல்லோரும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த அரசாங்கம் வரிகளை அதிகரித்துள்ளது.

பொது மக்களைச் சந்திக்க போகும் அங்கு இந்த அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

இந்த அரசாங்கத்தினை மாற்ற வேண்டுமென்று விரும்புகின்றார்கள். மக்களின் கையில் தான் ஆட்சி இருக்கின்றது என இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், இரு கட்சிக்குள்ளும் பிரச்சினை இருப்பதனால், கட்டாயம் காலப்போக்கில் ஆட்சி மாறும். இந்த வருடத்திற்குள் நல்லாட்சி அரசு கவிழும் என இதன்போது திஸ்ஸ விதாரண தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.