முதல் உரைக்காக வீட்டுக்குள் பல முறை ஒத்திகை.. தீயா வேலை செய்த சசி அன்டு கோ!

சசிகலா தனது முதல் உரையாற்றுவதற்கு முன்பு பல கார்டனில் பலமுறை அதற்கான ரிகர்சலை பார்த்துள்ளார். அதுவும் சிறிய மைக்கில் குடும்பத்தினர் முன்பு அவர் பேசிப்பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா உயிரிழந்த ஒரு மாதம் கூட கடக்காத நிலையில் கட்சியை கைப்பற்றிய சசிகலா குடும்பத்தினர் அதற்காக தீயா வேலை செய்தது தற்போது வெளியாகியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது தோழி சசிகலா கடந்த 29 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதுவரை அவரது குரலைக் கேட்காத மக்கள், சசிகலா அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்றதும் அவரது குரலைக் கேட்க ஆர்வம் காட்டினர்.

கடந்த 31ஆம் அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா பயன்படுத்தும் நாற்காலியில் அமர்ந்து பொறுப்பேற்றார். அன்றுதான் அவர் முதல் முறையாக வெளியுலகில் மைக் முன்பு பேசினார். அவரது முதல் உரை குறிப்பு மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்தது. உருக்கமாக, கேட்டவுடன் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.

நேர்த்தியாக கையாளப்பட்ட உரை
சரியான அறிக்கையை சரியான விதத்தில் பயன்படுத்திக்கொண்டார் சசிகலா. சசிகலா அந்த உரையை படித்த விதம் முழு அரசியல்வாதியை போன்று இருந்தது. பல மணி நேரம் செலவு செய்த தயாரிக்கப்பட்ட அந்த உரையை சசிகலாவும் மிக நேர்த்தியாக கையாண்டார்.

பலமுறை வாசித்த சசிகலா
இந்த உரை நடராஜன் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்டவுடன் அதனை சசிகலா பலமுறை படித்துப் பார்த்துள்ளார். நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி, கண்ணீர் விட வேண்டி இடத்தில் கண்ணீர் விட்டு, ஏற்ற, இறக்கத்துடன் வாசித்தார் சசிகலா.

மைக் முன்பு ரிகர்சல் செய்த சசி
மேடை பயம் போக வேண்டும் என்பதற்காக கார்டனில் சிறிய மைக் முன்பு குரலில் நடுக்கம் போகும் வரை பேசிப்பார்த்தாராம் சசிகலா. சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் முன்பு இந்த ஒத்திகை நடந்ததாக கூறப்படுகிறது.

நெறிப்படுத்திய தினகரன்
அவரது பேச்சைக் கேட்ட தினகரன் ஏற்ற இறக்கம், நிறுத்த வேண்டிய இடம், கண்ணீர் விட வேண்டிய இடம் என எல்லாவற்றையும் கூறி சசியின் பயத்தை போக்கியதாக தெரிகிறது. பல ரிகர்சல்களுக்குப் பின்னரே சசிகலா, அதிமுக தலைமை கழகத்தில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அந்தக் குறிப்பை வாசித்துள்ளார்.

உரைக்குப் பின் உடை
உரை விஷயம் திருப்தியளித்தப் பிறகு உடை விஷயத்தில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளனர் சசிகலா குடும்பத்தினர். இதன் வெளிப்பாடே ஜெயலலிதா போன்ற ஐயங்கார் நாமம், சிகை அலங்காரம், கெத்தைக் கூட்டும் காலர் வச்ச ஜாக்கெட், பச்சைப் புடவை ஆகியவையாம்.

தீயா வேலை செஞ்ச சசி அன்டு கோ
ஜெயலலிதா மரணமடைந்து 30 நாட்கள் முடிவதற்குள் இத்தனை வேலைகளும் சசிகலா குடும்பத்தினரால் கார்டனில் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா உயிரிழந்த அடுத்த சில நாட்களிலேயே இந்த பணிகள் தொடங்கப்பட்டிருந்தால் தான் குறித்த நாளுக்குள் ஒத்திகை நடத்திப் பார்த்திருக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆகையால் தான் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட 25ஆம் நாள் சசிகலா பொதுச்செயலாளர் பதவியை எடுத்துக்கொண்டு முதல் உரையை தத்ரூபமாக வாசித்துள்ளார் என்று கூறப்படுகிறது.