பரந்தாமனின் அருள் கிடைக்கும் விரதம்!

வளர்பிறையிலும், தேய்பிறையிலும் தசமி திதிக்கு அடுத்த திதியாக வருவதே ஏகாதசி திதியாகும். இந்த ஏகாதசி விரதம் விஷ்ணுவை வணங்கி இருக்க வேண்டும். யார் ஒருவர் உணவு உட்கொள்ளமலும், மவுனமாகவும் ஏகாதசி விரதம் இருக்கிறாரோ அவர் பரந்தாமனின் பூரண அருளைப்பெறுவார். அவருக்கு வறுமை நீங்கி செல்வம் சேரும். சவுபாக்கியம் உண்டாகும்.

லட்சுமிகடாட்சம் ஏற்படும். ஒரு வருடத்தில் 25 ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. வளர்பிறை ஏகாதசி என்றும், தேய் பிறை ஏகாதசி என்றும் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. நாழிகை வேறுபாட்டினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக இருபத்தைந்து ஏகாதசியும் விரதம் கடைபிடித்தால் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்துகள் நம்மைத் தேடிவரும்.

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, வைகானஸர் மேற்கொண்ட விரதத்தின் பயனாக அவருடைய முன்னோர்கள் (முக்தி) வைகுண்ட பதம் அடைந்ததிலிருந்து, அந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும் விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் பெயர்.

தை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு சபலா. (விருப்பை நிறைவிப்பது) என்று பெயர். நாடு கடத்தப்பட்ட மகிஷ்மதராஜனின் மகன், எதுவும் கிடைக்காததாலேயே, உண்ணாமலும், பசி, தாகத்தினால் உறங்காமல் இருந்தாலும் கூட, திருமால் அருளால் மீண்டும் அரசாட்சி பெற்ற நாள்.

தை மாதம், வளர்பிறை ஏகாதசிக்கு புத்ரதா (குலம் தழைக்க மகப்பேறு அருள்வது) என்று பெயர். பல வருடங்கள் புத்திரப்பேறு இன்றி வருந்திய சுகேதுமான் சம்பா என்ற அரச தம்பதியர்க்கு குழந்தை அருளிய பெருமையுடையது.

மாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு ஷட்திலா (ஷட் = ஆறு; திலா = எள்) என்று பெயர். உடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது. அதனை ஆறு வகையில் (குடிநீரிலோ, ஸ்நான தீர்த்தத்திலோ, உணவிலோ, வேள்வியிலோ, திண்பண்ட உருண்டையிலோ அல்லது வெறுமனேயோ) தானம் செய்ய மிகவும் உகந்த நாள்.

மாசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஜயா (நினைத்ததை அடைவதில் வெற்றி கோருவது) என்று பெயர். மால்யவான் என்பவன் தெய்வ அபசாராத்தால் ஏற்பட்ட அல்லல் நீங்கிய நாள்.

பங்குனி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா (இழந்த அரச பதவியை மீட்பது) என்று பெயர். விஷ்ணுவின் அவதாரமான இராமபிரானே, பகதாலப்ய முனிவரின் பரிந்துரைப்படி விரதமிருந்து அரச பதவியை மீளப்பெற்ற நாள்.

பங்குனி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஆமலகி (அளப்பரிய திறன் வாய்ந்த நெல்லி) எனப் பெயர். ருத்ராட்ச மரம் சிவத் தோன்றல் போல, நெல்லி திருமாலின் தோன்றலாகும். எல்லா தெய்வ சக்திகளும் கோமாதா காமதேனுவுள் அடக்கம் போல, நலன் பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியுள் அடக்கம். ஆதிசங்கரருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி, அவரை கனகதாரா துதியை பாடச் செய்து தங்க மழையை கொட்டுவித்தது போல பெரும் பயன் அருளவல்லது.

சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசி பாபமோசினி (தீவினையால் விளைந்த இன்னலை அழிப்பது) எனப்படும். மேதாவி முனிவரை காமவயப்படுத்தியதால் மஞ்சுகோஷாவுக்கு விளைந்த அல்லலைப் போக்கிய நாள்.

சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி காமதா எனப்படும். பிற கடமைகளை நிறைவேற்றாமல், மித மிஞ்சிய பாலுறவில் ஈடுபடுவதால் நேரும் இன்னலை நீக்கி அருளும் நாள்.

வைகாசி மாதம் தேய்பிறை ஏகாதசி வரூதினி (இம்மையிலேயே நன்மை தருவது) எனப்படும். மாந்தாதாவை இம்மையிலும், மறுமையிலும் நன்மை அடையச் செய்த நாள். அன்னதானத்திற்கும் மேலான வித்யாதானத்தின் பலனை அருளும் நாள்.

வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி மோகினி எனப்படும். மோகத்தில் ஆழ்ந்திருந்த அருணகிரியை முருகன் காத்தது போல. வாழ்வு போகங்களிலேயே ஆழ்ந்ததால் நேரிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் த்ருஷ்டிமான் என்ற அரச குமாரன் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, விரதமிருந்து மீண்ட நாள். அனைவரையும் மோகத்திலிருந்து விடுவிக்கும் நாள்.

ஆனிமாதம் தேய்பிறை ஏகாதசி அபரா (மறுமைக்கு வழி காட்டும்) எனப்படும். தெரியாததை மறைத்து, அறிந்தவர் போல நடக்கின்ற தவற்றை நீக்கிடும் நாள். உதாரணமாக, மருத்துவம் அறியாதவர் மருத்துவராக உலவுவது போன்று, இன்னும் பலர் வெவ்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றதாக ஊரை ஏமாற்றுவதால் நேரும் அல்லலை தவிர்க்கும் நாள்.

ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா (நீர் கூடப் பருகாமல் இருத்தல்) எனப்படும். சிலருக்கு அதிக நேரம் உண்ணாமை கஷ்டமாகத் தெரிவதில்லை. பலருக்கு என்றாவது உண்ணாமை சிரமமாக இருப்பதில்லை. இன்னும் சிலருக்கோ, இயற்கையாகவே, ஒரு வேளை கூட உண்ணாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலைக்கு பீமன் ஒரு உதாரணம். அவனும் கூட, இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர்.

ஆடிமாதம் தேய்பிறை ஏகாதசியை மோகினி என்பர். பொதுவாகவே, போகிகளாக இருக்கும் நமக்கு அதற்கு மேலான யோக நிலையை அடைந்திட அருளும் நாள்.
ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு சயனி என்று பெயர். ஒவ்வொரு ஜீவராசியும் வெவ்வேறு காலங்களில் ஓய்வு எடுப்பது போல, மகாவிஷ்ணு ஓய்வாக சயனிக்கத் துவங்கும் நாள்.

ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசி காமிகா எனப்படும். நம்மை அத்தியாவசியத் தேவைகட்கு கஷ்டப்படாமல் காத்து அருளும் நன்னாள். ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு (தை வளர்பிறை ஏகாதசி போல) புத்ரதா என்று பெயர்.

புரட்டாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு அஜா (வருத்தம் நீக்கும்) என்று பெயர். உண்மை பேசுவோரின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவதற்காக, சோதனைக்குள்ளாக்கப்பட்ட ஹரிச்சந்திர மகாராஜன் விரதமிருந்து, மீண்டும் நாடும் நலனும் பெறச் செய்த பெருமையுடையது.

புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி பத்மா எனப்படும். நாராயணன் (நாரா = நீர், அயனன் = துயில்பவன்) அருளால் மழை பொழிவித்து எங்கும் வளமை கூட்டும் பெருமையுடையது.

ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி இந்திரா எனப்படும். நற்செயல்கள் புரியாமையால் விளைந்த இன்னலைப் போக்குவது. ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா (அல்லனவையில் ஈடுபட்டதால் ஏற்பட்ட துன்பத்தை துடைப்பது) எனப்படும். நம்மை மட்டுமின்றி, தந்தை வழி தாய் வழி, மனையாள் வழி முன்னோரையும் நரக துன்பத்திலிருந்து மீட்கும் நாள்.

கார்த்திகை மாதம் தேய்பிறை ஏகாதசி ரமா (மகிழ்வு கூட்டுவது) எனப்படும். ஒருவர்க்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே வளமையருளும் நாள்.